பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி முறிந்தது - சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டி


பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி முறிந்தது - சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டி
x
தினத்தந்தி 4 Jun 2019 10:45 PM GMT (Updated: 4 Jun 2019 9:36 PM GMT)

உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள், சட்டசபை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளன.

புதுடெல்லி,

2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. அந்த தேர்தலில், மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜனதா 71 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இந்த 2019 தேர்தலில், எதிர் எதிர் துருவங்களில் இருந்து வந்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் பா.ஜனதாவுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருப்பினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் பா.ஜனதா 62 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாடி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், அப்னாதளம் 2 இடங்களிலும் வென்றன.

இந்த தேர்தல் முடிவுகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்தன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச சட்டசபை உறுப்பினர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 9 பேர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

இவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதால் எந்த நேரமும் 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் அமைத்த கூட்டணி, இப்போது முறிந்துள்ளது. இவ்விரு கட்சிகளும் சட்டசபை இடைத்தேர்தலில் தனித்தனியே போட்டியிட உள்ளன.

இதையொட்டி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல்கள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். சமாஜ்வாடி கட்சித்தலைவர் தனது கடமைகளை நிறைவேற்றினால், தனது மக்களை தன்பக்கம் மாற்றினால், எதிர்காலத்தில் நாங்கள் சேர்ந்து நடை போட முடியும்.

சமாஜ்வாடி கட்சியின் அடிப்படை ஓட்டுக்கள், அதாவது யாதவ் இன மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் கூட அவர்களது ஓட்டுக்கள், சமாஜ்வாடி கட்சிக்கு விழவில்லை என்பதை வருத்தமுடன் சொல்லிக்கொள்கிறேன்.

அந்த வகையில் டிம்பிள் யாதவ் கன்னோஜிலும், தர்மேந்திர யாதவ் பாதானிலும், ராம்கோபால் யாதவ் பெரோசாபாத்திலும் தோல்வியை தழுவி உள்ளனர். இது எங்களை நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேச சட்டசபை இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவதி அறிவித்த சிறிது நேரத்தில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர், “எங்கள் பாதைகள் வெவ்வேறானாலும், அதை நாங்கள் வரவேற்கிறோம். பகுஜன் சமாஜ் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டால், கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி 11 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும்” என அறிவித்தார்.


Next Story