நிதிசார்ந்த முடிவுகளை செயல்படுத்த புதுச்சேரி மந்திரிசபைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நிதிசார்ந்த முடிவுகளை செயல்படுத்த புதுச்சேரி மந்திரிசபைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மந்திரிசபை நிதிசார்ந்த முடிவுகளை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பெடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

மேலும், முதல்-மந்திரியின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பிலும், கிரண்பெடி சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை கடந்த 10-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், எதிர்மனுதாரரான கே.லட்சுமிநாராயணன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், கவர்னர் கிரண்பெடி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்றில், “புதுச்சேரி அரசு, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் சமீபத்தில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அதிகாரிகள் இடையே ஒருவகையான மிரட்சி நிலவுவதால் அரசு பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே, கவர்னர் அதிகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடரும்வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும், மத்திய அரசு மற்றும் கிரண்பெடி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.நட்கர்னி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி ஆகியோர் தங்கள் மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், கவர்னரின் அதிகாரத்தை பொறுத்தவரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கிய தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அப்படி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் புதுச்சேரியில் அரசு நிர்வாகம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்றும் கூறினார்கள்.

மேலும், “புதுச்சேரி அரசு ஏற்கனவே கூறியபடி வருகிற 7-ந் தேதியன்று நடைபெற உள்ள புதுச்சேரி மந்திரிசபை கூட்டத்தில் நிதி சார்ந்த கொள்கை முடிவுகள் எடுத்தால் அது தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள எங்கள் மனுவை செயலற்றதாக ஆக்கும் நிலை ஏற்படும். எனவே இதன் மீது உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

இதற்கு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ப.சிதம்பரம் மற்றும் கபில் சிபல் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் புதுச்சேரி முதல்-மந்திரியும் எதிர் மனுதாரராக சேர்த்துக்கொள்ளப்படுகிறார் என்றும், எதிர்மனுதாரர்கள் அனைவரும் கிரண்பெடி தரப்பில் தாக்கல் செய்த மனுவின் மீதான பதிலை வருகிற 21-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், வருகிற 7-ந் தேதியன்று நடைபெறவுள்ள புதுச்சேரி மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கலாம் என்றும், அதே நேரத்தில் நிலம் மாற்றுவது தொடர்பான நிதிசார்ந்த கொள்கை முடிவுகள் எவற்றையும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை செயல்படுத்தக்கூடாது என்றும், அது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.

அத்துடன், 7-ந் தேதி நடைபெற உள்ள மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மற்றும் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தரப்பில் 3 நாட்களுக்குள் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story