ஜூன் 8-ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு -இந்திய வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை ஜுன் 8-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புதுடெல்லி,
வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ம் தேதி கேரளாவில் துவங்கும். நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருவதால், தென்மேற்கு பருவ மழையை ஆவலோடு மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 நாட்கள் கால தாமதமாகி 6-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஒரு நாள் தாமதமாக 7-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருநாள் தாமதமாக ஜூன் 8-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அத்துடன் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழையை நம்பி தமிழக விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Related Tags :
Next Story