தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்தனர்
தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
இதில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான உத்தம்குமார் ரெட்டி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி. ஆனதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
திடீர் திருப்பம்
மாநில அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டி டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவரும், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவை சந்தித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மேலும் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் டி.ஆர்.எஸ். கட்சியில் இணையப்போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. காண்ட்ர வெங்கடரமண ரெட்டி கூறும்போது, “சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் சிறப்பு கூட்டத்தை கூட்டினோம். அதில் 12 எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சந்திரசேகரராவை ஆதரிப்பதாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகரிடம் 12 பேரையும் டி.ஆர்.எஸ். கட்சியில் இணைத்துவிடும்படியும் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்” என்றார்.
அந்தஸ்து பறிபோகும்
18 எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு பங்கான 12 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதால் அவர்கள் மீது கட்சித்தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களின் எண்ணிக்கை 6 ஆக குறைவதுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தும் பறிபோகும்.
அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story