உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு


உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Jun 2019 11:00 PM IST (Updated: 7 Jun 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலத்தில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று வீசியது. அப்போது இடி-மின்னலும் தாக்கியது. இந்த சூறாவளியில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல வீடுகள், கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த புழுதி புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மொத்தம் 50 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏதாக், காஸ்கன்ச், மொரதாபாத், படாவூன், பிலிபன்ச், மதுரா, கன்னோஜ், சாம்பால் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மைன்புரி மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 41 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் 8 கால்நடைகளும் இறந்துள்ளன. இந்த தகவலை மாநில நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்த சூறாவளி மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ள மந்திரிகள் நிவாரண பணிகளை மேற்பார்வையிடும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் எனவும், பாதிப்பு குறித்த விவரங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் விவரங்களை தனக்கு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Next Story