காதலியுடன் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ


காதலியுடன் ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபர்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 8 Jun 2019 2:45 AM IST (Updated: 8 Jun 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காதலியுடன் சேர்ந்து ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு,

பெங்களூருவில் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் ஸ்கூட்டரில் மிகவும் ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி ரோட்டில் காதல் ஜோடி ஒன்று ஸ்கூட்டரில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த ஸ்கூட்டரை ஓட்டிய வாலிபர் திடீரென்று, காதலியை பின்புறம் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் சாகசம் செய்தார். அதாவது, ஸ்கூட்டர் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வாலிபர், ஸ்கூட்டரின் முன்சக்கரத்தை மேல்நோக்கி தூக்குகிறார். மேலும், முன்சக்கரத்தை மேல்நோக்கி தூக்கியபடி செல்லும் ஸ்கூட்டரின் இருக்கைக்கு மேல் அந்த வாலிபர் எழுந்து நிற்கிறார். பின்னர், தன்னுடைய ஒரு காலையும் அந்த வாலிபர் மேல் நோக்கி தூக்கியபடி சிறிது தூரம் ஸ்கூட்டரில் வேகமாக செல்கிறார்.

ஸ்கூட்டரின் பின்புறம் அமர்ந்திருக்கும் அவருடைய காதலியும் வாலிபரை இறுக்கப்பிடித்து கொண்டு கத்தியப்படி இருந்தார். இதனை அவர்களுக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ‘ஹலோ’ என்ற செயலியில் சோனு என்பவரின் பெயரில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஸ்கூட்டரில் சாகசம் செய்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் வீடியோவில் உள்ள நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story