வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மக்களிடம் குறை கேட்டார் - இன்று டெல்லி புறப்படுகிறார்


வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மக்களிடம் குறை கேட்டார் - இன்று டெல்லி புறப்படுகிறார்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:30 PM GMT (Updated: 8 Jun 2019 10:34 PM GMT)

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மக்களிடம் குறைகளை கேட்டார். இன்று அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாடுக்கு வந்துள்ளார். முதல் நாளில் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 2-வது நாளான நேற்று காலை வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்தார்.

அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். ராகுல் காந்தியை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தியை விவசாயிகள், பழங்குடியினர் என பல்வேறு பிரிவினர் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். ஏராளமான மக்கள் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கையை கூறினார்கள். சிலர் மனுக்களும் கொடுத்தனர்.

ராகுல் காந்தி உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் வடக்கு கேரள மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் தற்கொலை, விவசாய கடன் தள்ளுபடி, மீண்டும் உர மானியம், நிலாம்பூர்-நஞ்சன்கோடு ரெயில் பாதை, எய்ம்ஸ் தரத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவை வயநாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் என அவர்கள் தெரிவித்தனர்.

ராகுல் காந்தியை மொத்தம் 22 பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தனர். அவர்களது புகார்களை ராகுல் காந்தி அமைதியாக கேட்டார். எம்.பி. என்ற முறையில் அவைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். சில பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசு மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் அங்கு பிரதிநிதிகளை சந்தித்த ராகுல் காந்தி கல்பேட்டா நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக புறப்பட்டு சென்றார். நேற்று மொத்தம் 6 இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் நின்று தங்கள் புதிய எம்.பி.யை வரவேற்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “மோடியின் தேர்தல் பிரசாரத்தில் பொய், விஷம், வெறுப்பு, மக்களை பிரித்தாளுதல் ஆகியவை நிறைந்து இருந்தது. தேர்தலில் அவர் நிறைய பொய் பேசினார். காங்கிரஸ் உண்மை, அன்பு, அரவணைப்பின் பக்கம் நின்றது. பா.ஜனதா உருவாக்கிய சகிப்பின்மையை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும்” என்றார்.

ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 3-வது நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


Next Story