ராகுல் காந்தி பிறந்தபொழுது உடனிருந்த நர்சுடன் சந்திப்பு
ராகுல் காந்தி தான் பிறந்தபொழுது உடனிருந்த நர்சை இன்று சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசினார்.
கோழிக்கோடு,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான வயநாடுக்கு வந்துள்ளார். முதல் நாளில் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 2வது நாளான நேற்று காலை வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்தார்.
அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். ராகுல் காந்தியை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ராகுல் காந்தியை விவசாயிகள், பழங்குடியினர் என பல்வேறு பிரிவினர் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர். ஏராளமான மக்கள் ராகுல் காந்தியை சந்தித்து தங்கள் கோரிக்கையை கூறினார்கள். சிலர் மனுக்களும் கொடுத்தனர்.
ராகுல் காந்தி உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் வடக்கு கேரள மாவட்டங்களான வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் தற்கொலை, விவசாய கடன் தள்ளுபடி, மீண்டும் உர மானியம், நிலாம்பூர்-நஞ்சன்கோடு ரெயில் பாதை, எய்ம்ஸ் தரத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவை வயநாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் என அவர்கள் தெரிவித்தனர்.
ராகுல் காந்தியை மொத்தம் 22 பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று மொத்தம் 6 இடங்களில் அவர் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் நின்று தங்கள் புதிய எம்.பி.யை வரவேற்றனர்.
இன்று 3வது நாளாக கேரளாவின் கோழிக்கோடு நகரில் தனது கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்தபடியே சென்ற அவருக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன் கோழிக்கோட்டில், ராஜம்மா என்ற ஓய்வு பெற்ற பெண் நர்சை நேரில் சந்தித்து பேசினார். ராகுல் காந்தி பிறந்தபொழுது நர்சாக பணியாற்றிய அவரிடம், பழைய நினைவுகளை பற்றி பேசினார். ராகுல் காந்தி தனது 3வது நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
Related Tags :
Next Story