என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம்: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம்: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 9:15 PM GMT (Updated: 10 Jun 2019 8:30 PM GMT)

என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம் தொடர்பாக, கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் என்பவர் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், என்ஜினீயரிங் படிப்புக்கான ‘ஜே.இ.இ.’ மெயின் நுழைவுத்தேர்வு மற்றும் ‘ஜே.இ.இ.’ அட்வான்ஸ்டு தேர்வுக்கும் அளிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்கனவே விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘மனுதாரர் மற்றும் மாணவர்களின் வசதிக்காக தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை ஒரு வாரத்துக்கு திறந்து வைத்திருக்க வேண்டும்’ என கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி உத்தரவிட்டது. ஆனால், உத்தரவை தேசிய தேர்வு முகமை செயல்படுத்தவில்லை என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த மாதம் 30-ந்தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, தேசிய தேர்வு முகமை தலைவர் பேராசிரியர் ஆனந்த் மற்றும் ரூர்க்கி, ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித்குமார் சதுர்வேதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து ஒத்திவைத்தனர்.

Next Story