‘வாயு’ புயல் எச்சரிக்கை: குஜராத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


‘வாயு’ புயல் எச்சரிக்கை: குஜராத்தில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலத்தில் ‘வாயு’ புயல் இன்று கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கரையை கடக்கிறது. அப்போது 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புயல் பாதிக்கும் 10 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 400 கிராமங்களை சேர்ந்த 2.91 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 36 கம்பெனி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 10 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முப்படைகளும், கடலோர காவல்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

ரெயில்வே நிர்வாகம் வெராவல், ஓஹா, போர்பந்தர், பாவ்நகர், புஜ், காந்திதாம் ஆகிய இடங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில்கள் நேற்று மாலை 6 மணி முதல் இடையிலேயே நிறுத்தப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. நாளை (வெள்ளிக்கிழமை) காலை வரை இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடற்கரை பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்கள், யார்டுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரெயில்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அவசர தேவைகளுக்காக 6 முதல் 10 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில்கள் பாதுகாப்பான இடங்களில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

புயல் நிலைமையை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலம் அவர், “மத்திய அரசு குஜராத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாயு புயல் பற்றிய நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுகளுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பல அமைப்புகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இடைவிடாது பணியாற்றி வருகின்றன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு தயாராக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், “அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் புயல் பாதிக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Next Story