நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு


நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 10:16 PM GMT)

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம், ஜூலை மாதம் 15-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பெங்களூரு,

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. இதன் தொடர்ச்சியாக, நிலவு தோன்றியது குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த விண்கலத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் அதை ஏவுவதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரோ இறங்கி உள்ளது. தற்போது பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருக்கும் சந்திரயான்-2 விண்கலம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டது.

பின்னர் இந்த விண்கலம் ஏவும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திரனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. பின்னர் சந்திரனில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலம் அனுப்ப கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அதன் பணிகளும் அப்போதே தொடங்கின.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பும் திட்டம் சிலமுறை தள்ளிப்போனது. எனினும் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 3.8 டன் எடை கொண்ட இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. எம்.கே-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதில் நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக லேண்டர் (தரையிறங்கும் களம்) மற்றும் ரோவர் (சுற்றும் வாகனம்), ஆர்பிட்டர் (விண்கலம்) ஆகிய கருவிகள் இணைக்கப் படுகின்றன. இதில் தரையிறங்கும் களத்திற்கு ‘விக்ரம்’ என்றும், ரோவருக்கு ‘பிரக்யான்’ என்றும் பெயரிட்டுள்ளோம். இந்த விண்கலம் 3.84 லட்சம் கி.மீ. பயணம் செய்து சந்திரனை அடையும்.

இந்த விண்கலம் சந்திரனின் தென்பகுதியில் தரை இறங்குகிறது என்பது இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு. செப்டம்பர் மாதம் 6 அல்லது 7-ந் தேதி இது தரை இறங்கும். இது மிகப்பெரிய சவாலானது. நிலவின் தெற்கு தரை பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதில், இந்தியா 4-வது நாடு ஆகும்.

சந்திரனில், கனிமங்கள், கால்சியம், இரும்பு தாது உள்ளிட்டவற்றை கண்டறிதல் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து அந்த விண்கலம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக சந்திரனின் தோற்றம் குறித்த மர்ம முடிச்சுகளை இந்த விண்கலம் அவிழ்த்து விடும்.

இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.978 கோடி ஆகும். இதில் விண்கலத்தின் செலவு மட்டும் ரூ.630 கோடி. ராக்கெட்டின் செலவு ரூ.375 கோடி ஆகும். இந்த விண்கலம் முற்றிலும் சொந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அத்துடன் நாசாவின் கருவி ஒன்றும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்கலத்தில் அனைத்து வகையான சோதனைகளும் நிறைவடைந்துவிட்டன. வருகிற 14-ந் தேதி (நாளை) இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்படுகிறது. அது 17-ந் தேதி அங்கு போய் சேரும். அதன் பிறகு அங்கு இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெறும்.

இந்த விண்கலம் மூலம் கிடைக்கும் தகவல்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலத்தின் தகவல்களை பெற தனியாக ஒரு தகவல் தொடர்பு மையத்தை அமைத்துள்ளோம். இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார்.


Next Story