உ.பி. தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை
2022–ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2019 தேர்தலில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நேரடி அரசியலில் களம் இறக்கப்பட்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். கிழக்கு உத்தரபிரதேசத்தில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட அமேதியில் தோல்வி அடைந்தார். ரேபரேலி தொகுதியில் வெற்றிப்பெற்ற சோனியா காந்தி மக்களுக்கு நன்றி தெரிவிக்க அங்கு சென்றார்.
அப்போது ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் சோனியா காந்தி விருந்து அளித்தார். அவர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அதில், பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் ஊழியர்கள் ஏராளமான யோசனைகளை தெரிவித்தனர். 2022–ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், காங்கிரஸ் மீண்டு எழும் என்று வாரணாசி முன்னாள் எம்.பி ராஜேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார். அதற்கு பிரியங்கா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த கூட்டத்தில் பிரியங்கா பேசும்போது, கட்சி ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றாததால்தான், தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story