வைப்புத்தொகை வட்டிக்கு வருமான வரியில் விலக்கு : நிர்மலா சீதாராமனுக்கு வங்கி சம்மேளனம் கடிதம்
பா.ஜனதா புதிய அரசு அமைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் 5–ந் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஐதராபாத்,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் வெங்கடாசலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
சேமிப்பு தொகை வட்டியில் மாற்றம் செய்வதில் வங்கிகளுக்கு அடிப்படை உரிமை உள்ளது. தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். 100 சதவீத பங்குத்தொகை வைத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளின் முழுமையான கட்டுப்பாட்டை அரசு நிர்வகிக்க வேண்டும். அதன் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது.
மத்திய அரசின் பட்ஜெட்டில், வைப்புத்தொகை வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வங்கி வராக்கடனை கிரிமினல் குற்றமாக அறிவித்து உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். வராக்கடனை வசூலிக்க கடன் தீர்ப்பாய மையம், விரைவு கோர்ட்டுகளை கூடுதலாக அமைக்க வேண்டும். ரூ.1 கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் விவரங்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.