பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்


பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்
x
தினத்தந்தி 14 Jun 2019 5:00 AM IST (Updated: 14 Jun 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் உருவான வாயு புயல், பாதை மாறிச் செல்வதால் குஜராத் தப்பியது.

ஆமதாபாத்,

அரபிக்கடலில் உருவான வாயு புயல், நேற்று குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்து இருந்தது. இதன் காரணமாக 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டனர்.

86 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 33 ரெயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. புயல் பாதிப்பை தடுக்கிற விதத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

துறைமுகங்கள், விமான நிலையங்களின் செயல்பாடுகளும், கடலோரப்பகுதியில் ரெயில் சேவை, பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

கடலோர காவல்படையினர், ராணுவம், கடற்படையினர், விமானப்படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.

சவுராஷ்டிரா பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள், 1,200 படகுளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் இருந்தனர். ஆனால் வாயு புயல் எச்சரிக்கையால் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஆனால் வாயு புயல் குஜராத்தை தாக்காது. கடலோரப்பகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். வாயு புயல், சிறிது பாதை மாறியுள்ளது. ஆனால், பலத்த காற்று வீசும். கன மழை பெய்யும் என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வுத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் தேவேந்திர பிரதான் நேற்று கூறுகையில், ‘‘வாயு புயல் கடலில் நிலை கொண்டு, சற்றே பாதை மாறி குஜராத் கடலோரப்பகுதிக்கு இணையாக மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்’’ என குறிப்பிட்டார்.

ஆமதாபாத்தில் இந்திய வானிலை ஆய்வுத்துறை கூடுதல் இயக்குனர் மனோரமா மொகந்தி கூறும்போது, ‘‘மிகவும் தீவிரமான வாயு புயலானது, சவுராஷ்டிரா கடலோர பகுதியை தாக்காது. அதே நேரத்தில் கிர்–சோமநாத், ஜூனகத், போர்பந்தர், தேவ்பூமி– துவாரகா மாவட்டங்கள், டையூ பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறினார்.

மேலும், ‘‘புயலின் கண் குஜராத்துக்குள் நுழையாது. ஆனால் புயலின் பாதிப்பகுதி, அதாவது வெளிப்புறப்பகுதி மாநிலத்தில் நுழைந்து, கரையோரப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வாயு புயல் தாக்கம் காரணமாக சவுராஷ்டிரா மற்றும் தென் குஜராத் பகுதியில் உள்ள 560 கிராமங்களில் மின்வினியோகம் பாதித்துள்ளது.

இருப்பினும் சற்றே பாதை மாறி செல்கிற நிலையில், வாயு புயல் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியது. இது அங்குள்ள மக்களுக்கு நிம்மதிப்பெருமூச்சை அளித்துள்ளது.


Next Story