‘‘கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம்’’ கே.கஸ்தூரி ரங்கன் பேட்டி


‘‘கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம்’’ கே.கஸ்தூரி ரங்கன் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2019 5:22 AM IST (Updated: 14 Jun 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

இந்தியை ஒரு மொழியாக கொண்ட மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை, அரசியல் புயலை கிளப்பி உள்ளது. தென்மாநிலங்களின் எதிர்ப்பால், இந்த அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.

மொழிகளை அடையாளம் காண மாநில அரசுகளுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டது. இருப்பினும், ‘‘மொழிக்கொள்கை என்பது திணிப்பது அல்ல, குழந்தைகளின் கல்வித்திறனை கூர்மைப்படுத்துவது ஆகும்’’ என்று இந்த வரைவு அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவரான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் கூறுகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:– இந்த கல்வித்துறை சீரமைப்பின் நோக்கம் என்ன?

பதில்:– இந்த கொள்கை 25 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது. சமூகம், பொருளாதாரம், தொழில், தொழில்நுட்பம், கலாசாரம் என பல்வேறு துறைகளில் இந்திய அளவிலும், உலக அளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலை தொழில்நுட்பங்களும், வணிக தேவைகளும் வந்துள்ளன. 

வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில், ஒரு வளர்ந்த நாட்டில் இந்த அம்சங்களை ஒரு நல்ல சமுதாயம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். உலக சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் நாம், நீடித்த வளர்ச்சி இலக்குப்படி, இவையெல்லாம் நமது கல்வியுடன் இணைந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கேள்வி:– எண்ணற்ற மாற்றங்களை பரிந்துரை செய்துள்ள இந்த கொள்கை, பெருமளவு முதலீடுகளும், தரமான மனித ஆற்றலும் தேவைப்படுபவை. இவற்றை அமல்படுத்துவதில் எத்தகைய சவால்கள் வரும் என்று கருதுகிறீர்கள்?

பதில்:– சவால்கள்... பள்ளி கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களை முன்வைத்து இருக்கிறோம். அப்புறம், இளநிலை பட்டப்படிப்பிலும், உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை சொல்லி இருக்கிறோம். உயர் கல்வித்தரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நம்மிடம் வலிமையான ஆராய்ச்சி கூறுகள் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைத்ததில் இவற்றுக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது இருக்கும் நிர்வாக முறையை மாற்றி அமைக்க வேண்டும். நிர்வாக முறையை மாற்றி அமைக்கும் வி‌ஷயத்தில் சவால்கள் உருவெடுக்கும் என்று கருதுகிறோம்.

பல்கலைக்கழக முறையில், நிதி, நிர்வாகம், கல்விரீதியாக தன்னாட்சியை கொண்டுவரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும். இளநிலை பட்டப்படிப்புகளில் தற்போதைய பாடத்திட்டம், கற்பித்தல் பணி ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டும். முக்கிய பாடங்களான அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் இதர தொழிற்படிப்புகளை சமூக அறிவியல், மானுடவியல், கலை ஆகிய படிப்புகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் பள்ளி கல்வியில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், இன்னும் தீவிர மாற்றங்கள் செய்ய வேண்டிய அம்சங்களும் உள்ளன.

கேள்வி:– இவற்றுக்கெல்லாம் எவ்வளவு காலம் தேவைப்படும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:– இதை நிறைவேற்ற மொத்தம் 10 ஆண்டு காலவரையறை நிர்ணயித்துள்ளோம். இதை படிப்படியாக செய்ய வேண்டும். அதே சமயத்தில், களத்தில் இந்த கொள்கை இலக்கை நிறைவேற்ற திறமை வேண்டும். மாணவர்களை மதிப்பிடுவது எப்படி என்பது போன்ற திறமைகள் தேவை. ஆகவே, ஏராளமான மாற்றங்களை கொண்டுவர வேண்டி உள்ளது. நிறைவேற்ற 10 ஆண்டுகளும், இந்த கொள்கை செல்லும் திசையை காண மேலும் 10 ஆண்டுகளும் தேவை.

கேள்வி:– பல மாநிலங்களில் பல மொழி கல்வி பற்றி இந்த வரைவு அறிக்கை பேசுகிறது. மொழிகள் மீது எதற்காக இந்த அழுத்தம்?

பதில்:– நல்ல கருத்து. இந்த வரைவு அறிக்கை, இணையதளத்தில் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அறிக்கையில் ஒரு அம்சத்தை பார்த்தால், அழுத்தம் தருவது நோக்கம் அல்ல என்பதை புரிந்துகொள்வீர்கள். மொழிகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. பன்முகத்தன்மை நிறைந்த சமுதாயத்தில், பிராந்திய மொழிகளுக்கும், உள்ளூர் மொழிகளுக்கும், செம்மொழிகளுக்கும், நவீன மொழிகளுக்கும் செழுமை இருக்கிறது. 

மொழி கற்றுக்கொள்வதின் முக்கியத்துவம் என்னவென்றால், உரையாடுவதற்கு மொழி தேவை. இரண்டாவது வி‌ஷயம், மொழி இருந்தால், நீங்கள் ஒரு கலாசாரத்தை பரப்ப முடியும். அது, கலாசாரத்தின் ஆரோக்கியமான பார்வையை கொண்டு வருகிறது. 

மூன்றாவது வி‌ஷயம், விஞ்ஞான அடிப்படையிலானது. 3 வயதில் இருந்து 8 வயதுக்குள் குழந்தையின் மூளை 85 சதவீதம் வளர்ச்சி அடையும். பல மொழிகளை கற்பதற்கு குழந்தைக்கு அது போதுமானதாக இருக்கும். மூன்று மொழிகளில், ஒன்று தாய்மொழியாக இருக்கலாம், இரண்டாவது மொழி உள்ளூர் மொழியாக இருக்கலாம். மேலும் சில மொழிகளை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும், பேசுவதற்கும் கற்றுக்கொள்வது மூளையில் மொழிகளை அணுகும் பகுதியை தூண்டச்செய்து, அங்குள்ள நரம்பியல் மண்டலத்தையும் தூண்டி விடுகிறது. அப்பகுதியில் உள்ள திசுக்கள் வேகமாக வளர்வதை இது உறுதி செய்கிறது. நிறைய மொழிகளை நீங்கள் கற்றால், அது மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேள்வி:– ஆனால், நிறைய மொழிகள் கற்பதை குழந்தைகள் விரும்புவது இல்லையே?

பதில்:– கற்றலை பொறுத்தவரை, மொழியை மகிழ்ச்சியான அனுபவமாக ஆக்கிக்கொள்ள முடியும். கற்றலில் சந்தோ‌ஷத்தை கொண்டு வருவது பற்றி வரைவு அறிக்கையில் ஒரு பத்தியே ஒதுக்கப்பட்டுள்ளது. கற்றலை சந்தோ‌ஷமான அனுபவமாக மாற்ற வியூகம், கற்பித்தல் பணி, இறுதியாக பாடத்திட்டம் ஆகியவற்றை மாற்ற வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி:– ஒரு கொள்கையின் முக்கியத்துவத்தை மக்கள் பெறாதபட்சத்தில், அந்த கொள்கையின் நோக்கம், அடிமட்டத்தில் வெற்றி பெறுவதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறதே?

பதில்:– நான் ஒப்புக்கொள்கிறேன். இதுதொடர்பாக பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பிய, இப்போது விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கு இது சாத்தியமானதுதான். அது நிச்சயமாக சவாலான பணிதான். ஆனால் முடியாதது அல்ல. நாம் இணக்கமாக பணியாற்ற வேண்டும். இந்த கனவை கள நிஜமாக்க ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். 

கேள்வி:– தாராளமய கலைகள் மீது பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கான தூண்டுதல் என்ன?

பதில்:– நிறைய அறிந்துகொள்ள வேண்டிய ஒரு நவீன யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று, இளங்கலை படிப்புகள் அனைத்தும் ஒரு வரம்புடன் கூடிய அறிவுடன் உள்ளன. இளங்கலை படிப்புகளை 4 ஆண்டுகள் கொண்டதாக பரிந்துரைத்துள்ளோம். 

இயற்பியலாளராக ஆக விரும்புபவர்கள், இயற்பியலை முக்கிய பாடமாக எடுக்கலாம். மேலும் ஒரு முக்கிய பாடத்தை எடுக்க விரும்பினால், அதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதான் தாராளமய கல்வியின் சாராம்சம். உங்கள் இருப்பிடம், பணி, இன்னும் அதுபோன்ற அம்சங்கள் அடிப்படையில், உங்கள் விருப்பத்தை தாராளமாக தேர்வு செய்துகொள்வதுதான், இதன் உச்சபட்ச நோக்கம். 

4 ஆண்டு படிப்பில், முதல் ஆண்டிலேயே நீங்கள்  விலக  விரும்பினால்,     ஒரு சான்றிதழுடன்  விலகலாம்.  அல்லது,  இரண்டாம் ஆண்டுக்கு பிறகு ஒரு பட்டயம் பெறலாம். மூன்றாவது ஆண்டில், ஒரு பட்டத்துடன் விலகலாம். நான்காம் ஆண்டில் ஆராய்ச்சி அல்லது கவுரவத்துடன் படிப்பை முடிக்கலாம். 

இதுபோன்ற முறையில், நீங்கள் பின்வரும் ஆண்டுகளில், உங்கள் படிப்பை தொடரலாம். திரும்பி வந்து படிப்பை முடிக்கலாம். இரண்டாம் ஆண்டில் விலகி இருந்தால், பிற்காலத்தில் இரண்டாம் ஆண்டில் சேரலாம். இது நெகிழ்வுத்தன்மையை அளிப்பதுடன், எந்த காலத்திலும் படிப்பை தொடர வாய்ப்பு அளிக்கிறது.

கேள்வி:– குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதை மாற்றாவிட்டால், இந்த யோசனைகளை அமல்படுத்துவது கடினமாகி விடும் அல்லவா?

பதில்:– இது தன்னிச்சையாக முடிவு எடுக்கும் முறை அல்ல. சமுதாயம், குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பெற்றோர் நிச்சயம் பொறுப்பானவர்கள்தான். பெற்றோர் உதவ வேண்டும் என்று விரும்புகிறோம். ஊடகங்கள் உதவ வேண்டும், அறிவுஜீவிகள் உதவ வேண்டும், உள்ளூர் தலைவர்கள் உதவ வேண்டும் என்று விரும்புகிறோம்.


Next Story