முதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு


முதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 6:05 PM GMT (Updated: 14 Jun 2019 6:05 PM GMT)

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால், தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதனிடையே  மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை (17-ம் தேதி) நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மம்தா தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்துக்கு பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தூண்டுதலே காரணம் என மம்தா பேசியதாகவும், இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், மருத்துவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிற்சி மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளையும் மம்தா பானர்ஜி நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடத் தயார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story