டி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் - தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை


டி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் - தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை
x
தினத்தந்தி 15 Jun 2019 4:00 AM IST (Updated: 15 Jun 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. தொடர்களின் தலைப்பு, நடிகர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மொழிகளிலும் காட்டுங்கள் என்று தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு இந்தி மற்றும் மாநில மொழி தனியார் செயற்கைக்கோள் டி.வி. சேனல்கள், தாங்கள் ஒளிபரப்பும் டி.வி. தொடர்களின் தலைப்பு, நடிகர்கள் பெயர், நன்றி அறிவிப்பு உள்ளிட்ட விவரங்களை ஆங்கிலத்தில் மட்டுமே காட்டுவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு தெரிய வந்தது. இப்படி செய்வது, இந்தி மற்றும் மாநில மொழிகள் மட்டுமே தெரிந்த பொதுமக்கள், அந்த தொடர் குறித்த முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது.

டி.வி. தொடர்களின் வீச்சை அதிகரிக்கவும், பார்வையாளர்களின் நலனுக்காகவும் எந்த மொழியில் தொடரோ, நிகழ்ச்சிகளோ ஒளிபரப்பாகிறதோ, அந்த மொழியிலும் அந்த விவரங்களை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில், இந்தி, மாநில மொழிகளில் காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் கூறியதாவது:-

இந்திய மொழிகளை மேம்படுத்தும்வகையில், எந்த மொழியில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறதோ, அந்த மொழியிலும் தகவல்களை காட்டுமாறு இந்த ஆணையை பிறப்பித்துள்ளோம்.

அவற்றுடன் ஆங்கிலத்திலும் காட்ட விரும்பினால், ஆங்கிலத்திலும் காட்டிக்கொள்ளலாம். நாங்கள் எதையும் தடுக்கவில்லை. இந்திய மொழிகளை சேர்த்துள்ளோம். அவ்வளவுதான்.சினிமாவுக்காகவும் இதுபோன்ற ஆணைகளை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story