பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று பா.ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2019 தேர்தலுக்கு முன்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்ற போது, தேர்தல் முடிந்தபின் எம்.பி.க்களுடன் வந்து தரிசனம் செய்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி, உத்தரவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்ய தாக்ரே , 18 எம்.பி.க்கள் என அனைவரும் அயோத்திக்கு வந்தனர். அவர்கள் காலை ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நவம்பர் மாதம் கூறியதை போன்று நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அனைத்து எம்.பி.க்களுடன் இங்கு வந்துவிட்டேன். நாடாளுமன்றம் நாளை கூட இருக்கும் நிலையில் எங்கள் எம்.பி.க்களுடன் வந்து தரிசனம் செய்துள்ளோம். அயோத்தி வழக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் இருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான அரசு உள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான துணிச்சல் பிரதமர் மோடியிடம் உள்ளது. அவசரச் சட்ட நடவடிக்கைக்கு சிவசேனா மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து இந்துக்களும் உங்களுடன் இருப்பார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும். ராமர் கோவில் அரசியல் அல்ல, இது நம்பிக்கையோடு தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story