முதல் மந்திரியுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி; மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது


முதல் மந்திரியுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி; மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது
x
தினத்தந்தி 17 Jun 2019 7:11 PM IST (Updated: 17 Jun 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரியுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முகமது ஷாகித் (வயது 77) என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  ஆனால் கடந்த 10ந்தேதி அவர் உயிரிழந்து விட்டார்.

இதற்கு மருத்துவர்களின் கவன குறைவே காரணம் என கூறி அவரது உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில், 2 மருத்துவர்கள் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் தீர்வு காண முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  போராட்டத்தினை விட்டு விட்டு பணிக்கு திரும்பும்படி அரசு கூறியது.  ஆனால் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்  மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை அடுத்து மேற்கு வங்காளத்தில் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

இதன்படி, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவ கல்லூரியில் இருந்தும் பிரதிநிதிகளாக 2 பேர் வந்து, முதல் மந்திரியுடனான சந்திப்பில் கலந்து கொள்வது என முடிவானது.  இந்த சந்திப்பு ஹவுரா நகரில் உள்ள தலைமை செயலகத்திற்கு அருகேயுள்ள அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் மந்திரியுடனான சந்திப்பிற்கு பின் மருத்துவ பிரதிநிதிகளில் ஒருவர் கூறும்பொழுது, இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்டு உள்ளது.  இதனால் போராட்டம் வாபஸ் பெறப்படும் என கூறினார்.  இதுபற்றிய முறையான அறிவிப்பு போராட்டம் நடைபெறும் என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியிடப்படும்.

Next Story