இரும்பு பெட்டிக்குள் அடைத்து ஹூக்ளி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் மாயம் - மேஜிக் நிகழ்ச்சியின்போது விபரீதம்


இரும்பு பெட்டிக்குள் அடைத்து ஹூக்ளி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் மாயம் - மேஜிக் நிகழ்ச்சியின்போது விபரீதம்
x
தினத்தந்தி 18 Jun 2019 3:30 AM IST (Updated: 18 Jun 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

மேஜிக் நிகழ்ச்சியின்போது, இரும்பு பெட்டிக்குள் அடைத்து ஹூக்ளி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் மாயமானார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் சாஞ்சல் லகிரி (வயது 41). பிரபல மேஜிக் நிபுணரான இவர் தன்னை ‘மேஜிக் நிபுணர் மாண்ட்ரேக்’ என அறிவித்து பல்வேறு சாகசங்களை செய்து வந்தார். அந்தவகையில் மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் நேற்று முன்தினம் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

இதில் லகிரியை இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட பெட்டிக்குள் அடைத்து பாலத்துக்கு கீழே செல்லும் ஹூக்ளி நதியில் கிரேன் மூலம் இறக்கினர். அந்த பெட்டிக்குள் இருந்து விடுபட்டு, ஆற்றுக்கு மேலே வருவேன் என அறிவித்து இந்த ஆபத்தான செயலில் அவர் இறங்கினார். இந்த விபரீத சம்பவத்தை ஏற்கனவே பலமுறை அவர் செய்துள்ளார்.

ஆனால் ஹூக்ளி நதியில் இறக்கி நீண்ட நேரமாகியும் சாஞ்சல் லகிரி, ஆற்றுக்கு மேலே வரவில்லை. இதனால் அவரை எதிர்பார்த்து பாலத்துக்கு மேலே காத்திருந்த அவரது பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா போலீசாரும், உள்ளூர் மக்களும் இணைந்து சாஞ்சல் லகிரியை ஆற்றில் தேடி வருகின்றனர். ஆனால் மாயமான அவரை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story