எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல்..!


எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல்..!
x
தினத்தந்தி 18 Jun 2019 3:33 AM GMT (Updated: 18 Jun 2019 3:33 AM GMT)

எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் ராகுல் காந்தி சென்ற நிலையில், ராஜ்நாத் சிங் கையெழுத்திட ராகுலுக்கு நினைவூட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்து உள்ளது. புதிய அரசு கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்ற நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவி ஏற்புக்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து மத்திய மந்திரிசபை கூடி விவாதித்தது. அப்போது புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடரின் அலுவல்களும் முடிவு செய்யப்பட்டன.

அதன்படி 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலையில் தேசிய கீதத்துடன் தொடங்கியது. முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலையில் மக்களவை கூடியதும், விதிமுறைப்படி புதிய உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சிறிது நேரம் மவுனம் அனுசரித்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் உரையாற்றினார். பின்னர் உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கியது. அவர்களுக்கு வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது,  வயநாடு எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் நடையைக் கட்டினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டுச் செல்லுமாறு ராகுலுக்கு நினைவூட்டினார். இதையடுத்து, ராகுல் காந்தி கையெழுத்திட்டுவிட்டு சென்றார். 


Next Story