தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை + "||" + Supreme Court to hear plea on doctors’ safety

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் ஒரு நோயாளி மரணம் அடைந்தார். உடனே ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்தனர். இதில் டாக்டரின் மண்டை உடைந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். பணிக்கு திரும்புமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதை டாக்டர்கள் ஏற்கவில்லை.

இதற்கிடையே, போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நேற்று (திங்கட்கிழமை) நாடுதழுவிய 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வேலை நிறுத்தம் தொடங்கியது.டெல்லி ‘எய்ம்ஸ்’ உள்ளுறை டாக்டர்கள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்டர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர் களை மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்புப் பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்  திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அதையேற்ற நீதிபதிகள், இந்த மனுவை செவ்வாய்க்கிழமை(இன்று) விசாரிப்பதாகத் தெரிவித்தனர்