ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு


ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 19 Jun 2019 12:15 AM GMT (Updated: 18 Jun 2019 11:25 PM GMT)

மக்களவை சபாநாயகராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளு மன்றத்துக்கு 7 கட்டங் களாக தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்கள் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி சந்தித்து வழங்கினர்.

அதைத் தொடர்ந்து 17-வது மக்களவை முறைப்படி அமைக்கப்பட்டது.

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கியது.

நேற்று முன்தினமும், நேற்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட பா. ஜனதா கட்சி மூத்த எம்.பி. வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவை (வயது 57) வேட்பாளராக பா.ஜனதா கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஓம் பிர்லாவை சபாநாயகர் பதவிக்கு பா.ஜனதா அறிவித்ததை அ.தி.மு.க., உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகள் மட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் போன்ற கட்சிகளும் ஆதரிக் கின்றன.

அவர் 16-வது மக்களவை சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பா.ஜனதா வேட்பாளரான ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தருமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் காங்கிரஸ் கூட்டணி, ஓம் பிர்லாவுக்கு தனது ஆதரவை திடீரென அறிவித்தது. இதை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதே நேரத்தில் துணை சபாநாயகர் தேர்தல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுவை ஓம் பிர்லா, மக்களவை செயலகத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் தலைவர்கள் பலரும் உடனிருந்தனர். வேட்பு மனுதாக்கலுக்கு நேற்று கடைசிநாள்.

எதிர்க்கட்சிகள் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவும் இல்லை.

எனவே இன்று (புதன்கிழமை) ஓம் பிர்லா, போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவதுதான் வழக்கம். இதில் இருந்து மாறுபட்டு 2002-ம் ஆண்டு முதல் முறை எம்.பி.யான சிவசேனாவின் மனோகர் ஜோஷியும், அவரை தொடர்ந்து 2 முறை எம்.பி.யான தெலுங்குதேசம் கட்சியின் ஜி.எம்.சி. பாலயோகியும் சபாநாயகர் பதவி வகித்தனர்.

கடந்த 16-வது மக்களவை சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன் 8 முறை எம்.பி. பதவி வகித்தவர்.

இந்த 17-வது மக்களவை சபாநாயகர் பதவியை இன்று ஏற்க உள்ள ஓம் பிர்லா, முதல் முறையாக கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த 2019 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று தொகுதியை தக்க வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 2014-ல் முதல் முறையாக போட்டியிடுவதற்கு முன்பாக இவர் 3 முறை ராஜஸ்தான் மாநில சட்டசபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story