பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு


பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2019 11:39 AM GMT (Updated: 19 Jun 2019 11:39 AM GMT)

இந்தியாவில் பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் போதிய மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் தாமதமாக ஜூன் 8ஆம் தேதியன்றுதான் மழை தொடங்கியது. இதேபோல் நாடு முழுவதும் இதுவரை பெய்திருக்க வேண்டிய பருவமழை சராசரிக்கும் கீழாக, 44 சதவீதம் அளவுக்கே பெய்துள்ளது.

இதனால் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய மழை இல்லாததால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, உணவு தானியங்கள், எண்ணெய் வகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுபொருட்கள் விலை உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் அதிகளவில் உற்பத்தியாகும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. வறட்சியால் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு, வங்கி கடன் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன்-செப்டம்பர் பருவத்தில் மழைப்பொழிவு இந்தியாவின் ஆண்டு மழையில் 70% ஆகும். இது நாட்டின்  2.5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு முக்கியமாகும்.

Next Story