“மீண்டும் களத்திற்கு வருவீர்கள்” ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி


“மீண்டும் களத்திற்கு வருவீர்கள்” ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 20 Jun 2019 5:35 PM GMT (Updated: 20 Jun 2019 5:35 PM GMT)

மீண்டும் நீங்கள் களத்திற்கு வருவீர்கள் என்று தவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 ரன் எடுத்த ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 117 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இந்த ஆட்டத்தின் போது கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியை பொறுத்து கொண்டு தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார்.

‘ஸ்கேன்’ பரிசோதனையில் அவரது இடது கை பெருவிரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அணியின் முக்கியமான சீனியர் வீரர் என்பதால் காயத்தை காரணம் காட்டி அவரை உடனடியாக கழற்றி விட அணி நிர்வாகம் விரும்பவில்லை. அவரால் 3 ஆட்டங்களில் விளையாட முடியாது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தவானின் காயத்தன்மை குறித்து துல்லியமாக அறிய சில மருத்துவ நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அவரது காயம் குறிப்பிட்ட காலத்திற்குள் குணமடைய வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நேற்று விலகினார்.  தவானுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 21 வயதான ரிஷாப் பான்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஷிகர் தவானின் விலகல் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களுக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ஷிகர்  நம்முடைய நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன். நான் இப்போது சிகிச்சைக்காக திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என உருக்கமாக தெரிவித்தார்.

தவானின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அன்புள்ள தவான்,  ஆடுகளம் உங்களை இழந்து தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  நீங்கள் விரைவில் குணமாகி, மீண்டும் களத்திற்கு வருவீர்கள். நாட்டுக்காக நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story