காவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு - மக்களவையில் திடீர் அமளி


காவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு - மக்களவையில் திடீர் அமளி
x
தினத்தந்தி 21 Jun 2019 10:00 PM GMT (Updated: 21 Jun 2019 9:37 PM GMT)

காவிரி பிரச்சினை குறித்த தமிழக எம்.பி.யின் பேச்சுக்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் திடீர் அமளி ஏற்பட்டது.

புதுடெல்லி,

தமிழகத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், மக்களவையில் நேற்று தனது கன்னி உரையை ஆற்றினார். அவர் பேசும்போது, “தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இது சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும்” என்று கூறினார்.

அப்போது கர்நாடக மாநில பா.ஜனதா எம்.பி.க்கள் ரவிக்குமார் உரைக்கு எதிராக முழக்கமிட்டனர். உடனே தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ரவிக்குமாருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால், அவையில் திடீரென அமளி ஏற்பட்டது.

பின்னர் நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய ரவிக்குமார் எம்.பி., ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story