60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு


60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 11:15 PM GMT (Updated: 21 Jun 2019 10:24 PM GMT)

60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, விவசாயிகள் 60 வயது கடந்த நிலையில், ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதையொட்டி நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாய துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 60 வயது கடந்த தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இது தன்னார்வ மற்றும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் ஆகும். 18-40 வயது விவசாயிகள் இதில் சேரலாம். பயனாளிகள், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) ஓய்வூதிய நிதி திட்டத்தில் உறுப்பினராக சேரலாம்.

இந்த திட்டத்தில் 29 வயதான ஒரு விவசாயி சேருகிறபோது மாதம் ரூ.100 செலுத்த வேண்டும். அரசும் இதே தொகையை செலுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மலிவு விலையில் ஏழை, எளியோருக்கு மருந்துகள் வழங்கும் விதத்தில் 1,032 அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் அதிகபட்ச விலையை அரசு நிர்ணயித்துள்ளது. 700 மருந்துகளை ஜன் ஆஷாதி ஸ்டோர்களுக்கு (மத்திய அரசின் மலிவு விலை மருந்துகடைகள்) அனுப்ப அரசு முயற்சிக்கிறது என மாநிலங்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி மன்சுக்லால் மாண்டவியா கூறினார்.

* மத்திய ஓமியோபதி கவுன்சிலை மறுகட்டமைப்பு செய்வதற்கான காலத்தை நீட்டிப்பதற்கான மசோதாவை மக்களவையில் சுகாதார துறை மந்திரி ஹர்சவர்தன் அறிமுகம் செய்தார்.

* பீகார் மாநிலம் முசாப்பர்பூரில் ஏராளமான குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த விவகாரத்தை மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அதற்கு பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளிக்கையில், “இது எனது அமைச்சகம் சார்ந்தது இல்லை. இருப்பினும், அரசு இதை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது” என கூறினார்.

* வெப்பம் தொடர்பான நோய்கள் தாக்கி இந்த ஆண்டில் கடந்த 9-ந் தேதி வரையில் 36 பேர் பலியாகி உள்ளனர் என மக்களவையில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஷ்வினி சவுபே தெரிவித்தார்.


Next Story