”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி: மாயாவதி விமர்சனம்


”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி: மாயாவதி விமர்சனம்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:29 AM GMT (Updated: 24 Jun 2019 3:29 AM GMT)

”ஒரே நாடு ஒரே தேர்தல்” பாஜகவின் சூழ்ச்சி என்று மாயாவதி விமர்சித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல் சமீப காலமாக வலுத்து வருகிறது. இந்த குரலை 2010-ம் ஆண்டு முதலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி எழுப்பினார். இது தொடர்பாக அவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசினார். இருப்பினும் இதில் அப்போது அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்த திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து ஒரே முயற்சியில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கு பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சியே ஒரே தேசம்-ஒரே தேர்தல்  யோசனை என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று   நடைபெற்றது. அப்போது இந்த குற்றச்சாட்டை மாயாவதி முன்வைத்தார். மேலும்,    ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கூறும் பாஜக, கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஏன் ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பேரவைத் தேர்தலை நடத்தவில்லை என்று மாயாவதி கேள்வி எழுப்பினார்.

Next Story