உத்தர பிரதேசத்தில் வாகன ஓட்டிகளிடம் துப்பாக்கி முனையில் சோதனை நடத்திய போலீசார்


உத்தர பிரதேசத்தில் வாகன ஓட்டிகளிடம் துப்பாக்கி முனையில் சோதனை நடத்திய போலீசார்
x
தினத்தந்தி 24 Jun 2019 1:11 PM GMT (Updated: 24 Jun 2019 1:11 PM GMT)

உத்தர பிரதேசத்தில் வாகன ஓட்டிகளிடம் துப்பாக்கி முனையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் போலீசார் துப்பாக்கி முனையில் வாகன சோதனையில் ஈடுபடும் வீடியோ வைரலாகி உள்ளது.  அங்குள்ள படான் நகரில் வாசீர்கஞ்ச் பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் இரு சக்கர வாகனங்களில் வருவோரை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.

வாகனங்களில் இருந்து இறங்குவோரின் இரு கைகளையும் மேலே தூக்கியபடி நிற்க உத்தரவிடுகின்றனர்.  அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுடுவது போன்று நிற்கின்றனர்.  இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே நிற்கின்றனர்.  பின்பு அவர்களிடம், ஆடையில் ஏதேனும் மறைத்து வைத்துள்ளார்களா? என முழுவதும் சோதனை செய்கின்றனர்.

இந்த சோதனை முடிந்ததும், துப்பாக்கிகளை போலீசார் கீழே இறக்குகின்றனர்.  வாகனத்தில் வந்தவரும் கைகளை இறக்கி விட்டு தனது வாகனத்தில் அங்கிருந்து செல்கிறார்.  சோதனை நடந்து முடியும் வரை வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இதுபற்றி காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் திரிபாதி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இதற்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டபொழுது போலீசாரின் மீது சிலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.  இதில் எங்கள் தரப்பு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.  அதனால் அவர்களை எதிர்கொள்ள இதுபோன்ற நடைமுறையை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என கூறினார்.

Next Story