வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என அறிக்கை


வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என அறிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 1:41 PM GMT (Updated: 24 Jun 2019 1:41 PM GMT)

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி என்று ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளை மதிப்பிடுமாறு தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், தேசிய பொது கொள்கை மற்றும் நிதி நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களை 
கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி நிறுவனங்களும் ஆய்வு செய்து  மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தன. இந்த அறிக்கைகளை ஆய்வு செய்ய காங்கிரஸ் உறுப்பினர் எம்.வீரப்பமொய்லி தலைமையில் நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. 

அக்குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் 28–ந் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அந்த அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 1980 - 2010 -ம்  ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.26 லட்சத்து 88 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தேசிய பொருளாதார மேலாண்மை நிறுவனம், 1990–ம் ஆண்டில் இருந்து 2008–ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்டவிரோத சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. தேசிய பொதுக்கொள்கை மற்றும் நிதி நிறுவனம், 1997–ம் ஆண்டில் இருந்து 2009–ம் ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்டவிரோத சொத்துகளின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.  பெரும்பாலான சொத்துகள் ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்துகள், பான் மசாலா, குட்கா, புகையிலை, தங்கம்–வெள்ளி, திரைப்படம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கருப்பு பண உருவாக்கம் மற்றும் கருப்பு பண குவிப்பை மதிப்பிட நம்பகமான வழிமுறை இல்லை என்றும், இந்த மதிப்பீடுகளை செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்ட துல்லியமான வழிமுறை இல்லை என்றும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. யூகங்கள் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 3 அறிக்கைகளிலும் ஒருமித்த தன்மை இல்லை. நேரமின்மை காரணமாக, இந்த நிலைக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, இதை முதல்கட்ட அறிக்கையாகவே கருத வேண்டும். இருப்பினும், இவற்றை அடிப்படையாக கொண்டு, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மற்றும் கணக்கில் காட்டாத சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்பார்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story