காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது - மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு


காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது - மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2019 9:47 PM GMT (Updated: 24 Jun 2019 9:47 PM GMT)

மத்திய அரசு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது என மக்களவையில் அக்கட்சி எம்.பி. குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி,

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:-

தற்போதைய மத்திய அரசு பாராட்டுகளுக்கு அடிமையான அரசாக உள்ளது. உண்மைகளை திரித்து கூறப்படும் பாராட்டுகளை பெறுவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. ஜனாதிபதி உரையில் முந்தைய அரசின் வளர்ச்சிப் பாதையை கருத்தில்கொண்டே மக்கள் 2-வது முறையாக இந்த ஆட்சி தொடர வலிமையான ஆதரவு அளித்திருப்பதாக கூறியிருப்பதற்கு காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவிக்கிறது.

காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டுவதும், வளர்ச்சிப் பணிகளை அவர்கள் மட்டுமே செய்ததாக தற்புகழ்ச்சி அடைவதும் தான் மத்திய அரசின் செயல்பாடாக இருந்தது. நாட்டில் பசுமை புரட்சியையும், வெண்மை புரட்சியையும் ஏற்படுத்தியது காங்கிரஸ் தான் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

பொருளாதாரம், நிலக்கரி உற்பத்தி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி மற்றும் பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதனை படைத்துள்ளது. 2ஜி, நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் என்று கிளறிவிட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்களில் நீங்கள் யாரையாவது பிடித்தீர்களா? சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் நீங்கள் சிறையில் அடைத்துவிட்டீர்களா? அவர்களை திருடன் என்று கூறித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். பின்னர் எப்படி அவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

பிரதம மந்திரி மிகப்பெரிய வியாபாரியாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டார். எங்கள் கட்சி தனது உற்பத்தியை விற்காததால் தோல்வி அடைந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான் கம்ப்யூட்டர் யுகம், மின்னணு தொழில்நுட்பம், அதிநவீன ஏவுகணை உள்ளிட்ட ராணுவ மேம்பாடு ஆகியவைகளை கொண்டுவந்தார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் பெறும் உரிமை, உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி பெறும் உரிமை ஆகியவை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அரசு காங்கிரஸ் அரசில் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளது.

இவ்வாறு கூறிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் துணிச்சலையும் பாராட்டினார்.


Next Story