கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி


கடந்த 5 ஆண்டுகளில் நாடு சூப்பர் எமர்ஜென்சிக்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 25 Jun 2019 6:36 AM GMT (Updated: 25 Jun 2019 7:59 AM GMT)

கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

கொல்கத்தா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி  பரிந்துரையை ஏற்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். 

21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.1975-ம் ஆண்டு 25-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. இந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட. மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அவசர நிலையை எதிர்த்தும் குரல் கொடுத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவசர நிலை நாட்டில் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாளை நினைவுபடுத்தி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில்  எமர்ஜென்சியை விட கடந்த 5 ஆண்டுகள் மோசமானது. கடந்த  5 ஆண்டுகள்  சூப்பர் எமர்ஜென்சியை நாடு சந்தித்து உள்ளது. வரலாற்றில் இருந்து நாம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க போராட வேண்டும் என கூறி உள்ளார்.


Next Story