குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்


குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 25 Jun 2019 6:42 AM GMT (Updated: 25 Jun 2019 7:11 AM GMT)

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலை தனித்தனியாக நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதுடெல்லி,

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், அக்கட்சியின் தலைவர் ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர். அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியானது. இந்நிலையில், காலியான இடங்களைத் தனித்தனி இடங்களாகக் கருத்தில்கொண்டு, அவற்றுக்கான இடைத்தேர்தலும் தனித்தனியாகவே நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிராக, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பரேஷ்பாய் தானாணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் கடந்த வாரம் நடைபெற்றது.

அப்போது, இந்த மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், முதலில் காலியான இடங்களின் தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதைப் பொருத்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைக் கருத்தில்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு எதிராக  காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.  மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என அறிவுறுத்தியது. 

Next Story