அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 12:46 PM GMT (Updated: 25 Jun 2019 12:46 PM GMT)

பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. போருக்கு செல்லக்கூடாது என அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது. ஈரான் மீதான நடவடிக்கையை அதிகரிக்கும் அமெரிக்கா, கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயத்துல்லா அல் காமெனி மற்றும் முப்படை தளபதிகள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டன. இதற்கான உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப், ஈரானுடன் போரை விரும்பவில்லை. அதே சமயம் அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். 
 
இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா–ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. அமெரிக்கா–ஈரான் இடையேயான கருத்து வேறுபாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் களையப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன என தெரிவிக்கப்பட்டது.  ஆனால், பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் மஜித் தக்த் ரவாஞ்சி இதுபற்றி பேசுகையில், அமெரிக்கா, ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடையை அமெரிக்கா விதித்திருக்கிறது. அமெரிக்கா இதே அணுகுமுறை தொடரும் பட்சத்தில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பே கிடையாது என்றார்.  தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதார தடைகள் ஈரான் மக்கள் மற்றும் நாட்டின் தலைவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் விரோத போக்கை காட்டும் மற்றொரு அறிகுறியாகும். அத்துடன் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என்பதையும் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார். 

Next Story