தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு + "||" + Karnataka told to release Cauvery water for June, July to Tamil Nadu

தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு 40.43 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,

காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதி நிதியை நியமித்து உள்ளன.


காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 3 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த மாதம் 28-ந்தேதி கூடியது. அந்த கூட்டத்தில், ஜூன் மாதத்துக்கு தமிழ்நாட்டுக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் ஜூன் மாதத்துக்கான தண்ணீரை 10 நாள் இடைவெளியில் 3 முறையாக திறக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டது. ஆனால் அதன்படி தமிழகத்துக்கு உரிய நீரை இதுவரை கர்நாடகம் திறந்து விடவில்லை.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு தரப்பில் அம்மாநில நீர் வளத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், தலைமை பொறியாளர் பங்காரு சுவாமி ஆகியோர் பங்கேற்றனர். கேரளா தரப்பில் அந்த மாநில நீர்வளத்துறை செயலாளர் டாக்டர் பி.அசோக் மற்றும் புதுச்சேரி அரசு தரப்பில் வளர்ச்சித்துறை செயலர் டாக்டர் ஏ.அன்பரசு ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில், “தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரினை கர்நாடகம் திறந்து விடாததாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததாலும் காவிரி டெல்டா பகுதியில் பாசனத்திற்காக இந்த ஆண்டும் வழக்கமாக திறந்து விடும் ஜூன் 12-ந்தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. டெல்டா பகுதி விவசாயிகள் பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீரை விடுவிப்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை விவகார வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க கூடாது என கூறப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மீறும் வகையிலும் காவிரி படுகையில் எவ்விடத்திலும் அணை, நீர்த்தேக்கம் மற்றும் நீரை திருப்புவதற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என முறையிடப்பட்டது.

மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் மத்திய நீர்வளக் குழுமத்தில் இருந்து தகுதிவாய்ந்த பொறியாளர்களை உடனடியான நியமனம் செய்ய வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை இடம் பெங்களூரு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் அதன் கூட்டங்கள் பெங்களூருவில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆணையத்தின் 4-வது கூட்டத்தில், நீர் பங்கீடு மற்றும் காவிரி படுகையில் பெய்துள்ள மழை அளவு உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்பட்டன. காவிரி படுகையில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை (மொத்தம் 40.43 டிஎம்.சி.) கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும்.

கர்நாடகத்தில் 4 நீர்த்தேக்கங்களில் இந்த 24-ந்தேதி வரை 1.77 டி.எம்.சி. தண்ணீரும், பிலிகுண்டுலு பகுதியில் 23-ந்தேதி வரை 1.885 டி.எம்.சி. தண்ணீரும் தேக்கி வைத்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே, நீர்வரத்து சாதாரணமாக இருக்கும் பட்சத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீரின் அளவை கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திறந்து விட வேண்டும்.

புதுச்சேரியை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையில் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை சரியாக பொழிந்து காவிரி படுகையில் நீர்ப்பற்றாக்குறை நீங்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் பதவி காலம் வரும் 30-ந்தேதியுடன் முடிகிறது. இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும்.