விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் கட்டாயம் என்பதை மாற்றலாமா? - மாநிலங்களிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது


விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் கட்டாயம் என்பதை மாற்றலாமா? - மாநிலங்களிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது
x
தினத்தந்தி 25 Jun 2019 9:18 PM GMT (Updated: 25 Jun 2019 9:18 PM GMT)

பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு கட்டாயம் என்பதை மாற்றி, விருப்ப அடிப்படையிலானது என்று மாற்றலாமா? என்பது குறித்து மாநிலங்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.

புதுடெல்லி,

‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. அதற்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை விவசாயிகளும், மத்திய, மாநில அரசுகளும் கூட்டாக செலுத்துகிறார்கள்.

கடன் வாங்கிய விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவது கட்டாயம் ஆகும். மற்ற விவசாயிகள், விருப்பத்தின்பேரில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால், அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தை விருப்பத்தின் அடிப்படையிலானதாக மாற்றுமாறு சில மாநில அரசுகளும், விவசாய அமைப்புகளும் மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இதுபற்றிய கேள்விக்கு மத்திய வேளாண் இணை மந்திரி புருஷோத்தம் ருபாலா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 24-ந் தேதி கடிதம் எழுதி உள்ளது. அதில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் கட்டாயம் என்பதற்கு பதிலாக, விருப்பத்தின் அடிப்படையிலானது என்று மாற்றலாமா? என்பது குறித்து கருத்து கேட்டுள்ளோம். இந்த கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story