இந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


இந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 10:22 PM GMT)

இந்தியா வலிமையான, பாதுகாப்பான நாடு என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புதுடெல்லி,

2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றபின்னர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று முதல் முறையாக பேசினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:-

இந்த தேசத்தின் வளர்ச்சியில் குறிப்பிட்ட சிலர் தான் பங்கேற்றதாக ஒருசிலர் (காங்கிரசார்) கருதுகின்றனர். அவர்கள் அந்த குறிப்பிட்ட சிலரது பெயர்களை மட்டுமே கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், மற்றவர்களை புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் நாங்கள் வேறுவிதமாக கருதுகிறோம். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக நாங்கள் கருதுகிறோம்.

அவர்கள் நரசிம்மராவின் சிறந்த பணிகள் பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா? இந்த மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அதே நபர்கள் மன்மோகன் சிங் பற்றி கூட பேசியதில்லை. காங்கிரஸ் கொண்டுவந்த நெருக்கடி நிலை ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை, அது எப்போதும் மறையாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து தப்பிக்க இதுதான் வழி என்று மக்கள் நினைத்து 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள்.

இந்தியா வலிமையான, பாதுகாப்பான, வளர்ச்சி அடைந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாடாக மாற வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்களில் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நான் சிந்திக்கிறேன், நாட்டு மக்கள் நல்வாழ்வுக்காக நான் போராடுகிறேன். 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததும், நமது குடிமக்களின் வாழ்க்கையில் நேர்மறையான வித்தியாசத்தை ஏற்படுத்த பணியாற்றுவதும் தான் எனக்கு திருப்திகரமாக இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


Next Story