தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்
x
தினத்தந்தி 26 Jun 2019 12:15 AM GMT (Updated: 25 Jun 2019 11:28 PM GMT)

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

புதுடெல்லி,

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க முடியும்.

6 பேர் பதவி காலம் முடிவு

மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். எனவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலா 6 பேர் வீதம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்த உறுப்பினர்களில் கனிமொழி (தி.மு.க.), கே.ஆர்.அர்ஜூனன் (அ.தி.மு.க.), ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிகிறது.

இவர்களில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டதால், அவர் தேர்வான நாளிலேயே அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த மாதம் தேர்தல்

இந்த நிலையில், மாநிலங்களவையில் காலியாகிற 6 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.

வேட்புமனு தாக்கல் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 8-ந் தேதி ஆகும். வேட்புமனு மீதான பரிசீலனை 9-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் 11-ந் தேதி ஆகும்.

தேர்தல் 18-ந் தேதி நடை பெறுகிறது. வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

தலா 3 இடங்கள்

தற்போது, சட்டசபையில் உள்ள கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. சார்பில் 3 உறுப்பினர்களும், தி.மு.க. தரப்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

6 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குப்பதிவு நடைபெறும்.

6 பேர் மட்டுமே போட்டியிட்டால், அவர்கள் அனை வரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வைகோ, அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் ஏற்கனவே மக்களவை தேர்தலின்போது பா.ம.க. வுடன் செய்துகொண்ட கூட்டணி உடன்பாட்டின்படி, மாநிலங்களவையில் அந்த கட்சிக்கு ஒரு இடம் தருவதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், பா.ம.க. சார்பில் ஒருவரும் எம்.பி.யாக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி பா.ம.க. எம்.பி.யாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுகிறார்.

அதேபோல ம.தி.மு.க.வுடன் தி.மு.க. ஏற்படுத்திய தேர்தல் கூட்டணி உடன்பாட்டின்படி, மாநிலங்களவையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் தி.மு.க. சார்பில் 2 பேரும், ம.தி.மு.க. சார்பில் ஒருவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி பார்க்கும்போது ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. ஆகிறார்.

உறுப்பினர்கள் பலம்

6 இடங்களுக்கான தேர்தலுக்கு பின்னர், மாநிலங்களவையில் அ.தி.மு.க.வுக்கு 10 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு 5 உறுப்பினர்களும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., பா.ம.க.வுக்கு தலா ஒரு உறுப்பினரும் இருப்பார்கள்.

Next Story