சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை நிராகரிப்பு: பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி துவக்கம்


சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை நிராகரிப்பு: பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி துவக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2019 3:37 AM GMT (Updated: 26 Jun 2019 3:37 AM GMT)

ஆந்திராவில் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசால் கட்டப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்த பிறகு கடந்த 2014-ம் ஆண்டு அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வரான பின்பு ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் எனக் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் 2016-ம் ஆண்டு முன்னதாக தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியேறினார். 

இதையடுத்து தான் ஆட்சியில் இருக்கும்போதே அந்த வீட்டின் அருகில் சுமார் 5 கோடி செலவில் பிரஜா வேதிகா என்ற மற்றுமொரு புதிய கட்டடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டடம் கட்டும்போதே ஆபத்தான நதிக்கரைக்கு அருகில் கட்டுவதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது


இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வென்றது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற அரசுக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதினார்.  அதில், பிரஜா வேதிகா கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஆந்திர அரசு ஏற்க மறுத்தது.

இதைத்தொடர்ந்து, பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிகளை மீறி முறையில்லாமல் நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன் உத்தரவிட்டார்.  இதையடுத்து, கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியது.  ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story