பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு


பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 Jun 2019 5:12 AM GMT (Updated: 26 Jun 2019 5:12 AM GMT)

பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

முசாபர்பூர்,

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது.

கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது.  பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

கடந்த 3 நாட்களுக்கு முன் முசாபர்பூரில் உள்ள மருத்துவமனையில் 109 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்தனர்.  இதனால் பலி எண்ணிக்கை 129 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், முசாபர்பூரிலுள்ள மருத்துவமனையில் 111 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 21 பேரும் பலியாகி உள்ளனர்.  இதனால் பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Next Story