உத்தரபிரதேசத்தில் அரசு துறைகளின் எண்ணிக்கை 57 ஆக குறைப்பு


உத்தரபிரதேசத்தில் அரசு துறைகளின் எண்ணிக்கை 57 ஆக குறைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 10:15 PM GMT (Updated: 29 Jun 2019 9:46 PM GMT)

உத்தரபிரதேசத்தில் அரசு துறைகளின் எண்ணிக்கை 57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 97 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு நிதி ஆயோக் பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து பல துறைகளை ஒன்றாக இணைத்து, மொத்த எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்தது.

இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் அகர்வால் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள மொத்த துறைகள் 57 ஆக குறைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 40 துறைகள் மற்ற துறைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி குடும்ப நலம், ஆயுஷ், மருத்துவ கல்வி, தாய்-சேய் நலப்பிரிவு போன்ற துறைகள் சுகாதாரத்துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதைப்போல தொடக்க கல்வி, இடைநிலை கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி போன்றவை கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பல துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. மாநில சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கு முன் இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என மாநில அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.

Next Story