கோடை விடுமுறைக்கு பின் சுப்ரீம் கோர்ட்டு நாளை திறப்பு: அயோத்தி, ரபேல் போன்ற முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது


கோடை விடுமுறைக்கு பின் சுப்ரீம் கோர்ட்டு நாளை திறப்பு: அயோத்தி, ரபேல் போன்ற முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது
x
தினத்தந்தி 29 Jun 2019 11:30 PM GMT (Updated: 29 Jun 2019 10:31 PM GMT)

கோடை விடுமுறைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டு நாளை திறக்கப்படுகிறது. இதில் அயோத்தி பிரச்சினை, ரபேல், ராகுல் மீதான அவதூறு வழக்கு போன்ற பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு 6 வாரங்கள் கோடை விடுமுறைக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. அப்போது முழுமையான அளவில் 31 நீதிபதிகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் பணிபுரிய உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரபேல் விமானம் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். விரைவில் இந்த மனு மீதான உத்தரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ராகுல் காந்தி மேற்கோள்காட்டி நரேந்திர மோடியை ‘காவலாளியே திருடன்’ என்று கூறினார். எனவே ராகுல்காந்தி மீது பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதுடன், வழக்கை முடித்துவைக்கவும் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கிலும் உத்தரவு வெளியிடப்பட இருக்கிறது.

அயோத்தி ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் பங்கிடுவது தொடர்பான அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இவைகளை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இதுபற்றி கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதற்காக ஒரு மத்தியஸ்த குழுவை அமைத்தது.

இதற்காக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான அந்த குழுவுக்கு ஆகஸ்டு 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒரு முடிவு எடுத்த பின்னர் இதற்கான உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் பிறப்பிக்கப்படும்.

இவைகள் தவிர வக்கீல்கள் தொடர்பான ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதற்கு எதிரான மனு ஆகியவையும் விசாரணைக்கு வருகிறது.


Next Story