அரசு ஊழியர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுவிப்பு


அரசு ஊழியர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுவிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2019 5:09 AM GMT (Updated: 30 Jun 2019 5:09 AM GMT)

அரசு ஊழியர்களை கிரிக்கெட் பேட்டால் தாக்கி சிறை சென்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி  சார்பில் உத்தரவிடப்பட்டது.  இதற்கான பணியில் கடந்த 26ந்தேதி ஊழியர்கள் ஈடுபட்டனர்.  இதனிடையே, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தேசிய பொது செயலாளராக இருக்கும் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் மற்றும் எம்.எல்.ஏ.வான ஆகாஷ் விஜய்வர்கியா அங்கு சென்றார்.

அவர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதில் வாக்குவாதம் முற்றி, கிரிக்கெட் பேட்டை கொண்டு அரசு அதிகாரியான தீரேந்திர சிங் என்பவரை ஆகாஷ் கடுமையாக தாக்கினார்.

எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் கூச்சலிட்டபடியே அரசு அதிகாரிகளை விரட்டி அடித்தனர்.  இதுபற்றிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது.  இந்தூர் 3 சட்டசபை தொகுதியில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகி உள்ள ஆகாஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகாஷ் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.  அவருக்கு நீதிபதி நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்த வழக்கில் ரூ.50 ஆயிரத்திற்கான தனிநபர் ஜாமீன் தொகையும், மற்றொரு வழக்கில் ரூ.20 ஆயிரத்திற்கான ஜாமீன் தொகையும் செலுத்தவும் உத்தரவிட்டார்.

இதற்கான நீதிமன்ற உத்தரவு போபாலில் இருந்து இந்தூருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.  இதனால் 4 நாட்களாக கைதியாக இருந்த ஆகாஷ் இன்று காலை விடுதலையானார்.

Next Story