ஈரமான ஓடுபாதை, அதிவேகம் விமானம் ஓடுபாதையைவிட்டு விலகியதற்கு காரணம் -தகவல்
மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதற்கு ஈரமான ஓடுபாதையும், அதிவேகமும்தான் காரணம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் துபாயில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் 183 பயணிகளுடன் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. விமானம் விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கிய போது, திடீரென ஓடுபாதையை விட்டு விலகி ஓட ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர்.
உடனே விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக நிறுத்தினார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினார்கள். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், தொழில்நுட்ப குழு வல்லுனர்கள் விரைந்து வந்து அந்த விமானத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தரையிறங்கியபோது விமானம் ஓடுபாதையை விட்டு விலகியதற்கு ஈரமான ஓடுபாதையும், அதிவேகமும்தான் காரணம் என விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. மழை காரணமாக விமானம் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 1000 அடி உயரத்தில் விமானம் வட்டமிட வேண்டியது இருந்தது. இரண்டாவது முறையே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் ஓடுதளத்திலிருந்து விலகி சென்றது. பின்னர் அப்பகுதியில் சகதியில் சிக்கியது, விமானியும் பிரேக்கை அழுத்தியதால் நின்றது என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி, இதேபோல் துபாயில் இருந்து வந்த விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஓடுபாதையை விட்டு விலகி ஓடி விமான நிலைய சுவரில் மோதி தீப்பிடித்ததில் 158 பயணிகள் உடல்கருகி பலியானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story