தெலுங்கானாவில் மேலும் 2 வனத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
தெலுங்கானாவில் மேலும் 2 வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம், கொமரம்பீம் ஆசிஃபாபாத் மாவட்டம், சிர்கூர்-கஹாஜ்நகருக்கு இடைப்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 20 ஹெக்டேர் வனப்பகுதியை அழித்து, ஆக்கிரமித்த சிலர் அங்கு விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, அங்கு மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறை முடிவு செய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, அங்கு மரக்கன்றுகளை நடவு செய்ய வனச்சரகரான பெண் அதிகாரி சி.அனிதா வனத்துறை ஊழியர்களுடன் சென்றார்.
டிராக்டரின் உதவியுடன், ஆக்கிரமிப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கினார். இந்த தகவல் பரவியதையடுத்து, நிலத்தை ஆக்கிரமித்தவர்களும், அவர்களுக்கு ஆதரவாக ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்துத் துணைத்தலைவர் கோனேறு கிருஷ்ணா மற்றும் சிர்கூர் தொகுதியின் எம்எல்ஏ கோனேறு கொனப்பாவின் சகோதரர் உள்ளிட்டோர் வனத்துறையினரை கம்பால் அடித்து விரட்டினர்.
வன்முறையில் ஈடுபட்ட அந்த கும்பல், டிராக்டர் மீது நின்றுக்கொண்டிருந்த பெண் அதிகாரி அனிதாவையும் கம்பால் திடீரென தாக்கியது. தாக்குதலால் நிலை குலைந்த அனிதா அப்படியே சரிந்து விழுந்தார். அவரை வனத்துறை ஊழியர்கள் கைத்தாங்கலாக, பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் எம்எல்ஏவின் சகோதரர் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தெலுங்கானா டிஜிபிக்கு தேசிய பெண்கள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள மண்டலப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியை அழித்து விவசாயிகள் நேற்று இரவு டிராக்டர் கொண்டு உழுது கொண்டிருந்தனர். இதனை பார்த்த 2 வனத்துறை அதிகாரிகள் உழுது கொண்டிருந்த விவசாயிகளை தடுத்தனர்.
அதன் பின்னர் கிராம மக்களால் 2 வனத்துறை அதிகாரிகளை சரமாறியாக தாக்கினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை அதிகாரிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு அதிகாரிகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story