மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட இளைஞர் அடக்கம் செய்வதற்கு சற்று முன்பு எழுந்ததால் அதிர்ச்சி
மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட இளைஞர் அடக்கம் செய்வதற்கு சற்று முன்பு எழுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜூன் 21- தேதி விபத்தில் காயம் அடைந்த 20 வயது இளைஞர் முகமது புர்கான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைபெற்று வந்த அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவருடைய சடலத்தை அடக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கல்லறைக்கு குழி தோண்டப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படவிருந்தது, அப்போது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உடலில் அசைவை கவனித்தபோது உயிர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக கலக்கமடைந்த குடும்பத்தினர் இளைஞரின் சடலத்தை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞரின் மூத்த சகோதரர் முகமது இர்பான் பேசுகையில், “சகோதரன் இறப்பால் பேரழிவிற்குள்ளானோம், அடக்கம் செய்ய நாங்கள் தயாராகி கொண்டிருந்த போது எங்களில் சிலர் அவரது கால்களில் அசைவைக் கண்டோம். நாங்கள் உடனடியாக புர்கானை ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவர் உயிருடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறி அவரை வென்டிலேட்டர் ஆதரவில் வைத்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.
இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் புர்கானுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் பேசுகையில், “நோயாளி ஆபத்தான நிலையில் உள்ளார், ஆனால் நிச்சயமாக மூளைசாவு கிடையாது. அவருக்கு துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் அவரது அனிச்சை வேலை செய்கின்றன. அவருக்கு வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டு சிகிச்சை நடக்கிறது,” என தெரிவித்துள்ளார்.
இர்பான் பேசுகையில், நாங்கள் முன்னதாக தனியார் மருத்துவமனைக்கு 7 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினோம். மேலும், எங்களிடம் பணம் இல்லை என்று நாங்கள் அவர்களிடம் கூறியபோது, அவர்கள் திங்களன்று புர்கான் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள் என கூறியுள்ளார். பணம் இல்லாத காரணத்தினால் உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டார் என தனியார் மருத்துவமனை அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர அகர்வால் பேசுகையில், இச்சம்பவம் குறித்து நாங்கள் தகவல் அறிந்துள்ளோம். இது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story