மும்பையில் கனமழை தீவிரம்: உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


மும்பையில்  கனமழை தீவிரம்:  உத்தவ் தாக்கரே, நவாப் மாலிக் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 3 July 2019 7:12 AM IST (Updated: 3 July 2019 7:12 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி உள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி உள்ளது.சாலைகள், தண்டவாளங்கள், குடியிருப்புகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து வருகின்றன.இந்த நிலையில் நிதிதலைநகரான மும்பை மாநகராட்சியின் அதிகாரத்தை தொடர்ந்து 20 ஆண்டுகளாக கையில் வைத்துள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயையும் இந்த மழை விட்டுவைக்கவில்லை.

பாந்திரா, காலாநகர் காலனி பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரே பங்களாவின் வெளியே சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் மாநகராட்சியை தொடர்ந்து கைப்பற்றி வைத்துள்ள சிவசேனா கட்சியின் அலட்சியத்தால் தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் கேலி- கிண்டலடிக்கப்பட்டு உள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் மும்பை கிழக்கு புறநகரில் உள்ள குர்லா எல்.பி.எஸ்.மார்க் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று பெய்த கனமழை காரணமாக அங்குள்ள நவாப் மாலிக்கின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தனது வீட்டுக்குள் முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கும் வெள்ளநீரில் நவாப் மாலிக் நிற்கும் புகைப்படத்தை எடுத்து அதை கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பையில் பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு செயல்படுத்தி வரும் மெட்ரோ ரெயில் திட்டங்களால் தான் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்த நவாப் மாலிக் இது தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மும்பை மாநகராட்சியையும் விமர்சித்து கருத்து வெளியிட்டு இருக்கிறார்.


Next Story