மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைந்தது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.
தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்-சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதே நேரத்தில், தமிழகத்தில் 6 மேல்-சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுக்கப்பட்டன. இதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க.வில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆகும் வாய்ப்பு இல்லை என்று உறுதியானது.
இந்நிலையில், மதன் லால் சைனி எம்.பி. மறைவை அடுத்து ராஜஸ்தானில் ஒரு இடம் காலியானது. எனவே ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப் போவது என்பது தற்போது உறுதி ஆகி உள்ளது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக தற்போது காங்கிரஸ் இருப்பதால் மன்மோகன் சிங் மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story