சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு


சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 3 July 2019 7:05 PM IST (Updated: 3 July 2019 7:05 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும் ஓய்வுப்பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் முறையாக விண்ணப்பிக்காமலும், சட்டவிரோதமாக பல சுரங்கங்கள் செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத சுரங்கங்களை  தடுக்க தவறியதற்காக மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருந்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு அறிவுறுத்தினர். அங்கு சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் ஒப்புடைக்குமாறு கூறிய நீதிபதிகள், கோல் இந்தியா நிறுவனம் இந்த நிலக்கரியை ஏலமிட்டு அந்த தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செலுத்துமாறு வலியுறுத்தினர்.

முன்னதாக, தங்கள் மாநிலத்தில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாக மேகாலயா அரசு அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story