மாநிலங்களவையில் ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு


மாநிலங்களவையில் ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
x
தினத்தந்தி 4 July 2019 3:30 AM IST (Updated: 4 July 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் ஆசிரியர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன.

புதுடெல்லி,

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களில் தலித் பிரிவினர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்து இருந்தது. இதற்கு பதிலாக மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் இடஒதுக்கீடு) மசோதாவை நாடாளுமன்றத்தில் தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த மசோதாவை ஆதரித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங், ‘மத்திய அரசு இந்த மசோதாவை கடந்த 2016-ம் ஆண்டே கொண்டு வந்திருக்க முடியும், ஆனால் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.

தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன என்றும் அவற்றை உடனே நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதைப்போல ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்டு, சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து பேசினர்.

Next Story